சென்னையில் 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்


சென்னையில் 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்
x

சென்னையில் 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

சென்னை,

டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் அதை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி, நேற்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசன் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மழைக்கால சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இதில், த.வேலு எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சங்கர்லால் குமாவத் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் டெங்குவை தடுக்கும் வழிமுறைகள் குறித்த மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

346 பேர் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 முகாம்கள் வீதம் மொத்தம் 45 சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இன்று வரை சென்னையில்3 ஆயிரத்து 962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 589 பேர் பயனடைந்துள்ளனர்.

மேலும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வீடு, வீடாக சென்று மக்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதுவரை, சென்னையில் 346 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தற்போது, 75 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story