மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு


மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொசுக்கள் பெருகிவிட்டன. இந்த கொசுக்களோடு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களும் பெருகி பொதுமக்களுக்கு நோய்களை பரப்பி வருகின்றன. இவ்வாறு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமானோருக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புஅதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர நாள்தோறும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார வட்டங்களில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் மற்றும் பெருங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர ராமநாதபுரம் சுகாதார வட்டத்தில் ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரமக்குடி சுகாதார வட்டத்திலும் ஏராளமானோர் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story