காய்ச்சல் பரவல் எதிரொலி: டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக 700 தற்காலிக பணியாளர்கள் நியமனம்


காய்ச்சல் பரவல் எதிரொலி:    டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக 700 தற்காலிக பணியாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக 700 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

மேல்சிகிச்சைக்கு பரிந்துரை

கடலூர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சளியுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து, அதன்மூலம் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கும் நிலையில் தேவைப்படும் நபர்களிடமிருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் டெங்கு, லெப்டோபைரோசிஸ், ஸ்கிரப்டைபஸ், டைபாய்டு போன்ற நோயை கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொசு மருந்து அடிக்கும் பணி

இந்த நிலையில் சளி, காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்திடும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு போன்ற காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணி, புகைமருந்து தெளிக்கும் பணி, குளோரினேஷன் ஆய்வு பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் மாலையில் பள்ளி வளாகத்தில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கொசு மருந்து அடித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.

1 More update

Next Story