செஞ்சேரிமலையில் டெங்கு தடுப்பு பணி: சுகாதாரத்துைற அதிகாரிகள் ஆய்வு

செஞ்சேரிமலையில் டெங்கு தடுப்பு பணி குறித்து சுகாதாரத்துைற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை கிராமம் காந்திநகர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கடந்த 9-ந்தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று கோவை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா ஆலோசனைப்படி, மாவட்ட மலேரியா அலுவலர் கல்விக்கரசன் மேற்பார்வையில், காந்திநகர் பகுதியில் கொசுக்கள் பரவ ஏதுவான இடங்கள், தேவையற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள், தேவையற்ற ஆட்டுக்கல், நீர் கலன்கள் முதலியவை சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் பணியாளர்களால் அகற்றப்பட்டது. பின், புகை மருந்து அடிக்கப்பட்டு, மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதற்கான பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளில் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டனர்.






