பழுதை சரிசெய்வதற்காக 296 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு


பழுதை சரிசெய்வதற்காக 296 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
x

பழுதை சரிசெய்வதற்காக 296 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5,187 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), 4,308 கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய 4,369 வி.வி.பேட் கருவிகள் என 13,864 மின்னணு வாக்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதில் நல்ல நிலையில் உள்ள 13,568 மின்னணு வாக்கு எந்திரங்கள் தேர்தல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டன. பழுதடைந்த நிலையில் உள்ள 26 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 43 கட்டுப்பாட்டு கருவிகள், 227 வி.வி.பேட் கருவிகள் என மொத்தம் 296 எந்திரங்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பழுதடைந்த 296 மின்னணு வாக்கு எந்திரங்களை சரிசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கை கலெக்டர் மோகன் திறந்து பழுதடைந்த மின்னணு வாக்கு எந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை சரிசெய்யும் பணிக்காக விழுப்புரத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகனத்தில் ஏற்றி பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, தாசில்தார்கள் ஆனந்தகுமார், சீனிவாசன், செந்தில், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் அகத்தியன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story