ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரம் பறிப்பு: வளர்ச்சி பணிகள் பாதிப்பு; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முறையீடு
ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரம் பறிக்கப்பட்டதன் எதிரொலியாக வளர்ச்சி பணிகள் பாதிப்பட்டதாக கூறிகலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
ஆதனூர் ஊராட்சி
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆதனூர் டி.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் டி.தமிழ்அமுதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து ஊராட்சியில் மின்கல ஊர்திகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பூங்கா, தெருவிளக்குகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதற்கு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெறாமல், மேலும் முறைப்படி ஒப்பந்தப்புள்ளி மேற்கொள்ளாமல் பல பணிகள் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரம் பறிப்பு
இதற்கு ஊராட்சி நிர்வாகம் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன், ஊராட்சி அனைத்து வங்கி கணக்கிலும் கையெழுத்து போடும் அதிகாரங்களை பறித்து தற்காலிகமாக முடக்கி வைக்க உத்தரவிட்டார். அதற்கு பதில் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி கலெக்டர் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ஆதனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.
கலெக்டரிடம் கோரிக்கை
பின்னர் ஆதனூர் சார்பில் 10 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஆதனூர் ஊராட்சி வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. என்றும், ஊராட்சியில் தொடர்ந்து வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என முறையீட்டு கோரிக்கை வைத்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.