புங்கனூர் ஊராட்சி தலைவர் தலைமறைவை தொடர்ந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிப்பு: மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு


புங்கனூர் ஊராட்சி தலைவர் தலைமறைவை தொடர்ந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிப்பு: மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு
x

புங்கனூர் ஊராட்சி தலைவர் தலைமறைவை தொடர்ந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி

நிலஅபகரிப்பு வழக்கு

திருச்சி தாயனூர் கிராமத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சி தலைவர் தாமோதரன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஊராட்சி நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரம் பறிப்பு

இந்தநிலையில் அரசால் தொடங்கப்பட உள்ள புதிய பணப்பரிவர்த்தனைக்கான வங்கி கணக்குக்கு இணையதளத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் விபர அறிக்கையை உள்ளீடு செய்வதற்காக ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொண்ட போது அவருடைய கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதால், பதிவேற்றம் மேற்கொள்ள முடியவில்லை என்று மணிகண்டம் வட்டார வளர்ச்சி அதிகாரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனால், புங்கனூர் ஊராட்சி தலைவர் மீது, நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், ஊராட்சி தலைவர் தலைமறைவாக இருப்பதாலும், வெளியூர் செல்லும் சமயத்தில் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறாமல் வெளியூர் சென்றுவிட்டதாலும், ஊராட்சி பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் ஏதும் செய்யமுடியாத நிலை உள்ளதாலும், ஊராட்சி மன்றத்தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203 கீழ் ஊராட்சி காசோலைகளின் கையொப்பமிடும் அதிகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த ஊராட்சியின், பணியாளர்களின் ஊதியம், குடிநீர் கட்டணம், பாராமரிப்பு செலவினம், மின்கட்டணம், அனைத்து திட்ட நிதி செலவினம் ஆகியவற்றை நிர்வகிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்படத்தக்கது.


Next Story