திருச்சியில் லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உடந்தையாக இருந்த பெண் ஏட்டு பணியிடை நீக்கம்


திருச்சியில் லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உடந்தையாக இருந்த பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
x

திருச்சியில் லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உடந்தையாக இருந்த பெண் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சியில் லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உடந்தையாக இருந்த பெண் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆவண எழுத்தர்

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து இவருடைய மனைவி கீதா. ஆவண எழுத்தரான கீதா கடந்த 2019-ம் ஆண்டு திருவெறும்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த மனை தனக்கு சொந்தமானது என்றும், போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் குமார் அந்த நிலத்தை அபகரித்துவிட்டதாக திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் சுந்தரம் என்பவர் புகார் செய்தார். அதன்பேரில் குமார் உள்பட 8 பேர் மீது கடந்த 2021-ம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ.1 லட்சம் லஞ்சம்

அத்துடன், ஆவண எழுத்தர் கீதாவும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வந்துவிட்டார். தற்போது இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தயாரித்து வந்தனர். அப்போது, இந்த வழக்கில் இருந்து கீதாவை விடுவிக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் (வயது 53) கடந்த மாதம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கீதா இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும்போது, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெண் ஏட்டு பணியிடை நீக்கம்

இதற்கிடையே போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட்டுக்கு மாவட்ட குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த ஹேமாகேத்ரின் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் ஹேமா கேத்ரின் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

மேலும், அவர் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது விசாரணையின் அடிப்படையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருச்சி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story