நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்
தமிழகத்தின் நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்
தமிழகத்தின் நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கலந்துரையாடல் கூட்டம்
வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதனையொட்டி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் வேலூரை அடுத்த அரியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் நண்பர்கள், எதிரிகள், கழக துரோகிகளை சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது சாதாரணமானது அல்ல. நீங்கள் வெற்றி பெற்ற பகுதி வளர்ச்சியடைய வேண்டும்.
தமிழக அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநாடு நாமக்கல்லில் அடுத்த மாதம் (ஜூலை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
சிறப்பாக ஆட்சி
கருணாநிதியின் ஆட்சிகால முடிவில் தமிழகம் ரூ.1½ லட்சம் கோடி கடனில் இருந்தது. அதன் பின்னர் 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.7 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்று விட்டார்கள்.
இந்த கடன் சுமையுடன் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். நிதி கஷ்டத்தை மக்களிடத்தில் கூற முடியாது. நிதிநெருக்கடி, கடன்களையும் சமாளித்து முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்கிறார்.
நிதிநிலைமையை சமாளித்து ஆட்சி செய்தவர் மு.கருணாநிதி. அதேபோன்று அவரது மகனுக்கும் நிதிநிலைமையை சமாளிக்க தெரியும். கடந்த ஆட்சியில் அளித்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் தற்போது முதல்-அமைச்சர் வருகையின்போதாவது விமர்சனம் கிடைக்குமா என்ற நோக்கத்தில் மக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். எனவே அதிகளவு மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா தொற்று பரவல் வந்தது. தடுப்பூசி போடுவதற்கு அதிக செலவாகிவிட்டது. மழை, வெள்ளம் வந்து எல்லாத்தையும் அடித்து சென்றுவிட்டது. நிதி ஆதாரம் இருந்தால் 95 சதவீத மனுக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்க முடியும்.
பேனர்கள், தோரணங்கள் கட்டக்கூடாது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின்போது வழிநெடுகிலும் நின்று அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் கொடி, பேனர்கள், தோரணங்கள் கட்டக்கூடாது.
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க, கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்ளிட்டவை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.
இதுவரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.