கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு...!
கல்வராயன்மலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில்171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக இந்த கல்வராயன் மலை உள்ளது.
மலையில் உள்ள நீர் ஓடைகள் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாரம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 பேரல்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கரியாலூர் போலீசார் வாரம் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து சம்பவ இடத்திலே கொட்டி அழித்தனர்.