700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
முத்துப்பேட்டை அருகே 700 லிட்டர் சாராய ஊறலை அழித்து 7 பேரல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை ைகது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிரடி சோதனை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் செந்தில்குமார் (வயது38). இவர் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவாரூர் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சாராய ஊறல் அழிப்பு
சோதனையில் 7 பேரலில் சாராயம் காய்ச்ச தேவையான 700 லிட்டர் ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஊறலை அங்கேயே கொட்டி அழித்தனர். பின்னர் ஊறலுக்கு பயன்படுத்திய 7 பேரல் மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.