மகளிர் உரிமைதொகை பெற விண்ணப்பிக்க விரிவான ஏற்பாடு
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
மாதம் ரூ.1000
கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய ரேஷன்கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பம் பெற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 கடைகளில் முதல்கட்டமாக 326 கடைகளில் இந்த மாதம் 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை, 2-வது கட்டமாக 449 கடைகளில் அடுத்த மாதம் 5 முதல் 16-ந்தேதி வரை காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறுகிறது.
775 இடங்களில் நடைபெறவுள்ள இந்த முகாம்களில் விண்ணப்பம் பதிவு செய்வதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் 1,192 பேரும், முகாம் பொறுப்பு அலுவலர்களாக கிராம நிர்வாக அலுவலர், வரி வசூலிப்பவர், ஊராட்சி செயலர், கிராம உதவியாளர் நிலையில் 775 பேரும், பதிவு செய்ய வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு உதவி புரிவதற்காக மகளிர் சுய உதவிக்குழு தன்னார்வலர்கள் 836 பேரும், கண்காணிப்பு பணிகளுக்கு துணை தாசில்தார் நிலையில் 5 முகாம்களுக்கு 1 அலுவலர் என 155 மண்டல அலுவலர்களும், முகாம்களை மேற்பார்வையிட தாசில்தார் நிலையில் 15 முகாம்களுக்கு ஒரு அலுவலர் என 22 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதற்கட்ட பயிற்சி
தாலுகா அளவில் இந்த பணிகளை கண்காணிப்பதற்கு சப்-கலெக்டர் நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக, ராமநாதபுரத்திற்கு வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடிக்கு சப்-கலெக்டர், திருவாடானைக்கு ஊராட்சி உதவி இயக்குனர், கமுதிக்கு ஆயத்துறை உதவி ஆணையர், முதுகுளத்தூருக்கு தாட்கோ மாவட்ட மேலாளர், கடலாடிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், கீழக்கரைக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், ஆர்.எஸ்.மங்கலத்திற்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர், ராமேசுவரத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்ப பதிவு பணியில் ஈடுபட்டுள்ள இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி 2 நாள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள், எந்த நாளில் முகாமிற்கு வர வேண்டும் என்பதற்கான டோக்கன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர் மூலமாக முகாம் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக வீடு வீடாக சென்று நேரில் வழங்கப்படும்.
நடவடிக்கை
விண்ணப்பிக்க விரும்பும் 21 வயதிற்கு மேற்பட்ட குடும்பத்தலைவிகள் குடும்ப அட்டையில் பெயர் உள்ள தகுதி வாய்ந்த இதர மகளிரில் ஒருவர் மட்டும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் முகாம் நடைபெறும் மையத்திற்கு விண்ணப்பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனையும் கொண்டு செல்ல வேண்டும். முகாம்களில் ரேஷன் கடை பணியாளர்களால் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்படும் நாளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்படும் நாளில் பதிவு செய்யத் தவறினால், முகாம் நடைபெறும் கடைசி 2 நாட்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள், முறைகேடான செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.