அறுவடை எந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம்


அறுவடை எந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை எந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை எந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-

வாடகை நிர்ணயம்

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 'பெல்ட் டைப்' அறுவடை ஏந்திரங்களுக்கான வாடகை ஒருமணி நேரத்திற்கு ரூ.2,450 ஆகும். 'டயர் டைப்' அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒருமணி நேரத்திற்கு ரூ.1,750 ஆகும்.

நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாடகை வசூலித்து, எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

புகார் மீது நடவடிக்கை

ஒருசில இடங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தினால் மாவட்ட நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு அதிகமாக வாடகை வசூலிப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மானியத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள், மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல், மாவட்ட, வட்டார வாரியான உரிமையாளர்களின் பெயர், விலாசம், எந்திர வகை மற்றும் செல்போன் எண்ணுடன் தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவுசெய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் வாடகை செலுத்தி பயன்பெற வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் 'பெல்ட் டைப்' அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒருமணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும், 'டயர் டைப்' அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொறியியல் துறை அறுவடை எந்திரங்களையும் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம்.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் தாசில்தார், வேளாண் அல்லது கீழ்க்கண்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம். வேளாண்மைப் பொறியியல் துறை, நாகப்பட்டினம் செயற்பொறியாளர்- 9442049591, உதவி செயற்பொறியாளர்- 9443277456, உதவி பொறியாளர்- 9445240064.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story