யாகசாலை பூஜையுடன் தேவர் ஜெயந்தி விழா தொடங்கியது


யாகசாலை பூஜையுடன் தேவர் ஜெயந்தி விழா தொடங்கியது
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

பசும்பொன்னில் யாக சாலை பூஜையுடன் தேவர் ஜெயந்தி விழா தொடங்கியது.

ராமநாதபுரம்

கமுதி,

பசும்பொன்னில் யாக சாலை பூஜையுடன் தேவர் ஜெயந்தி விழா தொடங்கியது.

தேவர் நினைவாலயம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.. மாதந்ேதாறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர்,சுப்பிரமணியர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்கப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இன்று கும்பாபிஷேகம்

இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளை நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நடத்தினார். இதையடுத்து தேவர் ஜெயந்தி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடக்கிறது. அதன்பின்னர் காலை 9 மணிக்கு ேமல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது. குருபூஜை விழாவானது இன்று ஆன்மிக விழாவாக கொண்டாடப்படுகிறது.

10 ஆயிரம் போலீசார்

நாளை(சனிக்கிழமை) அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். நினைவாலயத்தில் தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story