தேவர் தங்கக்கவசம்: மதுரை ஐகோர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு - விரைவில் விசாரணை


தேவர் தங்கக்கவசம்: மதுரை ஐகோர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு - விரைவில் விசாரணை
x

வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை பெறுவது குறித்து மதுரை ஐகோர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை,

வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை பெறும் அதிகாரம் எனக்கே உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்கக் கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்றுச்செல்வார்கள்.

தற்போது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளன.

எனவே, தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக உள்ள எனக்கே தங்கக்கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் எங்களிடம் தங்கக்கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே வருகிற 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்கக்கவசத்தினை நாங்கள் எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அ.தி.மு.க. சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story