ரூ.14¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.14¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:45 PM GMT (Updated: 25 Oct 2023 7:45 PM GMT)

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ரூ.14¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் நகராட்சி

ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.14 கோடியே 70 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதில் குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் ரூ.8 கோடியே 64 லட்சத்தில் கிரிவலப்பாதை, ரூ.6 கோடியே 6 லட்சத்தில் காந்திநகர் கிறிஸ்தவ ஆலயம் முதல் காமாட்சியம்மன் கோவில் வழியாக சின்னக்குளம் வரை ஓடையில் தடுப்புச்சுவருடன் கூடிய மழைநீர் வடிகால் மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கி, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலைய கட்டிடத்தை அவர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, பல புதிய திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார்.

ரூ.1,000 கோடியில் குடிநீர் திட்டம்

ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிகளுக்கு காவிரி நீர் ஆதாரத்தைக் கொண்டு ரூ.1,000 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டன்சத்திரம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. பெண்களுக்கு கலைஞர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின்கட்டண ரசீது ஆகியவைகளுடன் பதிவு செய்தால், அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். அவர்களில் தகுதியானவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் நகர் பகுதியில் டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதுபோல் பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு கல்லூரிக்கு கட்டிடம்

ஒட்டன்சத்திரம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கள்ளிமந்தையத்தில் ரூ.15 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.7 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவில் சார்பில் பெண்கள் கல்லூரிக்கு ரூ.68 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் ரூ.11 கோடியில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இது விரைவில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி 18 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 35 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, பஸ்வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனி ஆர்.டி.ஓ. சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையர் மீனா, பொறியாளர் சக்திவேல், தாசில்தார் முத்துச்சாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story