ரூ.51½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் ரூ.51 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.51.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி ஈச்சம்பட்டியில் பிரதம மந்திரியின் முன்னோடி கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு மற்றும் துத்திக்குளம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள வட்டார அளவிலான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.
சத்துணவு கூடம்
மேலும் பொதுப்பணி துறையின் சார்பில் நாமக்கல் நகராட்சி, பெரியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் அமைப்பதற்கான புதிய கட்டிடம் மற்றும் நாமக்கல்-பரமத்தி சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்புடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.