ரூ.9.36 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.9.36 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

ரூ.9.36 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.9.36 கோடி மதிப்பீட்டில் 12 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழுதாழைமேடு ஊராட்சியில் ரூ.34.5 லட்சம் மதிப்பீட்டில் மதழுதாழைமேடு காலனி - வாணதிரையான்பட்டிணம் இடையே சாலை அமைக்கும் பணியையும், பிள்ளைப்பாளையம் கிராமத்தில் ரூ.70.73 லட்சத்தில் பிள்ளைப்பாளையம் - கொல்லாபுரம் ரேஷன் கடை வரை சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து இடைக்கட்டு கிராமத்தில் ரூ.225 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி - சிதம்பரம் சாலையில் இருந்து இடைக்கட்டு செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணியையும், முத்துசேர்வாமடம் ஊராட்சியில் ரூ.110.85 லட்சம் மதிப்பீட்டில் முத்துசேர்வாமடம் - கோழிகொண்டான் இடையே சாலை அமைக்கும் பணியையும், மீன்சுருட்டி ஊராட்சியில் ரூ.74.42 லட்சத்தில் மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் மற்றும் 30 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டும் பணியையும், மீன்சுருட்டி வடக்குத் தெருவில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.3.30 லட்சத்தில் வடிகால் அமைத்தல் பணியையும், ரூ.3.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லக்குவன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநில தி.மு.க. சட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story