வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கோவை மாவட்டத்தில் நளடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் நளடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
கோவை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.260 கோடியில் சாலை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 561 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.
செம்மொழி பூங்கா
மேலும் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் 24 மணிநேர குடிநீர் திட்டத்தை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதுபோன்று தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவை சிறை வளாகத்தில் 45 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவுக்கு தற்போது ஒப்பந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் அந்த பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார்.
விரைந்து முடிக்க வேண்டும்
சங்கனூர் ஓடையின் கரைகள் பலப்படுத்தப்பட்டு அங்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
மேலும் அவினாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்க முதல்-அமைச்சர் ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணிகள் தற்போது ஆய்வில் உள்ளது.
இதுதவிர வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் சரவணம்பட்டி, காளப்பட்டி வெள்ளக்கிணறு, ஒண்டிப்புதூர் பகுதியில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் விரைவில் ஆய்வு
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்காக சென்றுள்ளார். அதேபோல கோவை மாவட்டத்திற்கும் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதற்கான தேதியை முதல்-அமைச்சர் அறிவிப்பார். ஆய்வுக்கு வருகின்ற போது எந்தெந்த பணிகள் முடிக்க வேண்டும், புதிய பணிகள் என்னென்ன தேவை என்பதையும் அவரிடத்தில் நாம் கேட்கலாம் என்பதற்காக இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கோவைக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். வீட்டு வசதி வாரியத்தில் பத்திரம் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது.
செல்வபுரம் பகுதியில் வீடு மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு அலுவலர்கள் இல்லாமல் வேறு நபர் வாடகைக்கு உள்ளார்களா? என கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும். தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் பார்கள்
சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் தவறு இருக்கலாம், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 500 கடைகள் மூடுகிற போது கூட பக்கத்தில் வேறு கடை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் மூடினார்கள்.
டாஸ்மாக் பார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும், நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.