வளர்ச்சி திட்டப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தல்


வளர்ச்சி திட்டப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 2:33 AM GMT)
நாமக்கல்

ஆய்வுக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களின் நோக்கம் முழுமை அடையும் வகையில் செயல்படுத்தப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கிய வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

முன்னதாக அவர், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஊத்துவாரி 4-வது தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.4.35 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும், மேட்டுப்பட்டி ஊராட்சியில் ரூ.5.64 லட்சத்தில் சமத்துவபுரம் மயானம் மேம்பாடு செய்யும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் மேட்டுப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பொதுமக்களுக்கு உரிய காலத்திற்குள் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

பின்னர், மேட்டுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பயன் பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் மின்கல தெளிப்பான், வேளாண் கருவிகள், சாமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோனாங்கிப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 250 டன் கொள்ளளவு கொண்ட ஊரக கிடங்கினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, மகப்பேறு பிரிவு, பல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்டு மருத்துவ வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவக்குமார், உதவி கலெக்டர்கள் சரவணன், கவுசல்யா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவம்) ராஜ் மோகன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story