113கோடியில் வளர்ச்சி பணிகள்


113கோடியில் வளர்ச்சி பணிகள்
x

கோவை மாநகராட்சி பகுதியில் 113 கோடியில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி பகுதியில் ரூ.113¼ கோடியில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

வளர்ச்சி பணிகள் தொடக்கம்

கோவை மாநகராட்சி காளப்பட்டி நேருநகர், கவுண்டம்பாளை யம், உடையாம்பாளையம், குறிச்சி, ஈச்சனாரி, போத்தனூர் உள்பட பல இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் 50 நகர்நல மையங்களுக்கு கட்டி டம் அமைத்தல், 10 நகர்நல மைய கட்டிடங்களை சீரமைத்தல் உள்பட ரூ.113¼ கோடியில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா நடந்தது.

இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மேயர் கல்பனா முன்னிலை வகித்தார். இதில் ரூ.113¼ கோடி வளர்ச்சி பணிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.198 கோடியில் சாலை

தமிழக தலைநகராக சென்னை இருந்தாலும், தொழில்துறையின் தலைநகராக கோவை விளங்கி வருகிறது. எனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகளை மேம்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியை ஒதுக்கி உள்ளார்.

குறிப்பாக கோவை மாநகராட்சி பகுதியில் 53 நகர்நல மையங்களுக்கு கட்டிடம் கட்டவும், 10 நகர்நல மையங்களின் கட்டிடங்களை சீரமைப்பது என 63 நகர்நல மையங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தபோது சாலை களை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி தற்போது ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று (நேற்று) 32 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைத்தல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

கோவை மாநகர பகுதி மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ரூ.1,132 கோடியில் கோவை விமான நிலைய விரிவாக் கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.800 கோடி செலவு செய்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் திட்டங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் என மொத்தம் 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கணக்கில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கோவை மற்ற மாவட்டங்களை விட வளர்ச்சி பெற்ற மாவட்டமாக விளங்கும்.

மேம்பாலங்கள் திறக்கப்படும்

கோவை மாவட்டத்தில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியின்போது 1 லட்சத்து 17 ஆயிரத்து 680 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 75 ஆயிரத்து 790 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்கள் விரைவில் திறக்கப்படும்.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, உண்மைக்கு புறம்பான தகவலை தான் சொல்லி வருகிறார்.

அவர் சொன்ன தவறான கருத்துக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். ஆனால் அவர் தனது தவறான கருத்து குறித்து இதுவரை பதில் சொல்லவில்லை. எனவே பொதுமக்கள் மத்தியில் வைக்கும் கருத்து சரியா, தவறா என்று யோசித்து கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story