ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் சர்வ அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் சித்திரை மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக நேற்று காலை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தன்ர். இதையொட்டி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு கோவிலின் வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி சாலை வரையிலும் நீண்ட வரிசையில் நின்று நீராடி சென்றனர். பின்னர் கோவிலில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்காக பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த உப கோவிலான கெந்தமாதனபர்வதம், கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.