வீர அழகர் வைகையில் எழுந்தருளும் இடத்தில் கூடுதல் உயரத்துடன் மின்கம்பங்கள்-பக்தர்கள் வரவேற்பு


வீர அழகர் வைகையில் எழுந்தருளும் இடத்தில் கூடுதல் உயரத்துடன் மின்கம்பங்கள்-பக்தர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:19 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் வீர அழகர் வைகையில் எழுந்தருளும் இடத்தில் கூடுதல் உயரத்துடன் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரையில் வீர அழகர் வைகையில் எழுந்தருளும் இடத்தில் கூடுதல் உயரத்துடன் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

சித்திரை திருவிழா

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் வீர அழகர் இறங்குதல் உள்ளிட்ட வைபவங்களுடன் இந்த விழா நடக்கும்.

ரத வீதிகளின் இருபுறமும் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளுக்கு, தேரோட்டத்தின்போது மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்படும்.

கோவில் எதிரே வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும்போது வழியில் உள்ள மின்கம்பிகளும் அகற்றப்பட்டு அழகர் இறங்கிய பின் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.

32 அடி உயர மின்கம்பங்கள்

இதனை தவிர்க்க மின்கம்பங்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது முதல் கட்டமாக வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் இடத்தில் 16 அடிக்கு பதிலாக 32 அடி உயரம் கொண்ட இரும்பு மின் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் எதிரே 3 புதிய மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பில்லை. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.


Next Story