200 மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்


200 மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
x

200 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் வந்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

பழமை, பாரம்பரியத்தை போற்றும் வகையில் கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டுவண்டிகளில் பயணம் செய்து தங்களது குலதெய்வமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதரை தரிசிக்க வருவது வழக்கம். இவ்வாறு வருபவர்கள் மறுநாள் கொள்ளிடக்கரையில் முடிகாணிக்கை கொடுத்து, ரெங்கநாதரை தரிசித்து செல்வார்கள்.

அதன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட காரணம்பட்டி, கீழவெளியூர், கள்ளுப்பட்டி, ராக்கம்பட்டி, தொரைக்கலாம்பட்டி, டி.மேலப்பட்டி, புதுப்பட்டி, சங்காயிப்பட்டி மற்றும் திருச்சி மாவட்டம் காவல்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்கள் கிராமங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு 200 மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர், மினிவேன் என்று மொத்தம் 300 வாகனங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு புறப்பட்டனர்.

மாட்டு வண்டிகளில் பயணம்

முன்னதாக காரணம்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் வீட்டில் சகுணம் பார்த்தனர். பின்னர் அவர்கள் ஒருநாள் தங்குவதற்கு தேவையான உணவு, உடை, அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு காரணம்பட்டிக்கு வந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 1,500 பேர் வந்திருந்தனர்.

இதையடுத்து அங்கிருந்து மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்பட்டு தாயனூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, புத்தூர் நால்ரோடு, கரூர் பைபாஸ்ரோடு, காவிரிபாலம், அம்மா மண்டபம் ரோடு, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் வழியாக நேற்று காலை 11 மணியளவில் மேலூரில் உள்ள தென்னந்தோப்பிற்கு வந்தனர்.

முடிகாணிக்கை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு, கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என முடிகாணிக்கை செலுத்துவார்கள். பின்னர் அங்கிருந்து வடக்குவாசல் வழியாக ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வார்கள். பின்னர் ஏற்கனவே நேர்த்திக்கடனாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு குழந்தைகளுக்கு காது குத்தி சாமி தரிசனம் செய்வார்கள். இதையடுத்து அன்னதானம் வழங்கிவிட்டு இன்று இரவே மாட்டு வண்டிகளில் வந்த வழியே ஊர் திரும்புவார்கள்.

இதற்கிடையே நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் நேற்று பக்தர்களின் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும், இன்றைய தலைமுறை சிறுவர், சிறுமியரும் ரோட்டோரங்களில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


Next Story