பவானி ஆற்றில் பக்தர்கள் நீராடினர்
மேட்டுப்பாளையத்தில் ஆடிப்பெருக்கையொட்டி பவானி ஆற்றில் பக்தர்கள் நீராடினர். கன்னிமார் பூஜை செய்து முன்னோர்களை வழிபட்டனர்
மேட்டுப்பாளையம்
ஆடிப்பெருக்கையொட்டி மேட்டுப்பாளையம் அருகே வனபத்ர காளியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அங்கு 26 வகை வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, காலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கரையோரத்தில் உள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, மற்றும் பீமன் பகாசுரன் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கொடி மரத்தின் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கையொட்டி பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அவர்கள் ஆற்றில் நீராடிய பிறகு ஆற்றின் கரையோர பகுதியில் ஏழு கல் எடுத்து வைத்து படையல் இட்டு, தேங்காய் உடைத்து கன்னிமார் பூஜை செய்தனர். இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் முன்னோர்களை வழிபட்டனர்.
புதுமண தம்பதிகள் கோவில் வளாகத்தில் மாலை மாற்றி புதிதாக தாலிகட்டிக் கொண்டு அம்மனை வழிபட்டனர். இது போல் மேட்டுப்பாளையம் சுப்ரமணியசாமி கோவில் மற்றும் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.