மகா மாரியம்மன் கோவிலுக்கு பால்குடத்துடன் வந்த பக்தர்கள்
மகா மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நேற்று 56-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் வேண்டுதலின்படி பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்தும், நாக்கு, கன்னம் மற்றும் உடலில் அலகு குத்திக்கொண்டும் மேளதாளம் முழங்க, ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர். அப்போது ஆங்காங்கே பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு காலில் தண்ணீரை ஊற்றி வழிபாடு செய்தனர். மேலும் சிலர் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டே ஊரைச் சுற்றி வந்தனர்.
தாங்கள் வேண்டிக்கொண்டபடி குழந்தை பாக்கியம் கிடைத்ததையடுத்து, சிலர் கரும்பு தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து, ஊர் முழுவதும் சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிலர் பறவை காவடி எடுத்து வந்தனர். கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக மோர் மற்றும் கூழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் திருமானூர், திருமழபாடி, கீழக்கவட்டாங்குறிச்சி, அண்ணிமங்கலம், ஏலாக்குறிச்சி, அரண்மனைகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.