நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி திருவாசகம் பாடிய பக்தர்கள்


நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி திருவாசகம் பாடிய பக்தர்கள்
x

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் சிவபக்தர்கள் ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உலகபுகழ் பெற்ற நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி சாமிதரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து இருந்தனர்.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினர் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் உடனே அமலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கோவிலின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் கோவிலுக்கு சென்றனர். ஆனால் அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

அதிரடி உத்தரவு

இந்த நிலையில் கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு மூலம் கடந்த 2 நாட்களாக இக்கோவில் விவகாரம் குறித்து கருத்துக்கேட்பு நடந்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இப்படி இப்பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தி வந்த வேளையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு கால பூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிட நேரத்தை பக்தர்கள் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடுவதற்கு ஒதுக்கலாம். இதை கோவில் நிர்வாகம் மறுக்கக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடி உத்தரவிட்டனர்.

உடனடியாக அமல்

இந்த உத்தரவை தொடர்ந்து நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி தேவாரம் மற்றும் திருவாசகம் பாட சிவ பக்தர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 11.30 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் சிவ பக்தர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கீழசன்னதி வழியாக நடராஜர் கோவிலுக்கு சென்றனர்.

திருவாசகம் பாடினர்

பின்னர் சிவபக்தர்கள் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி மனமுருக தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் தீட்சிதர்களிடம், கோவிலில் திருவாசகம், தேவாரம் பாட அனுமதி வழங்க வேண்டும் என கூறி கடிதம் கொடுத்தனர். அதனை தீட்சிதர்கள் பெற்று கொண்டனர்.

பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாடுவதற்கு தீட்சிதர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story