விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் இருந்த ஜெகமுத்து மாரியம்மன் கோவில் சாலை விரிவாக்கம் காரணமாக தற்போது நாச்சியார்பேட்டை அருகே எருமனூரில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இருந்து வருடந்தோறும் தை மாதம் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக ஜெகமுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரியம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடைவீதி, தென்கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டுச் சென்றனர். இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு புறப்படுகின்றனர்.