கோவிலில் முடி காணிக்கை செலுத்த புகைப்படம் எடுக்கும் முறையால் பக்தர்கள் சிரமம்
கோவிலில் முடி காணிக்கை செலுத்த புகைப்படம் எடுக்கும் முறையால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் இலவசமாக முடி காணிக்கை செலுத்துவதற்கு தற்போது ஆன்லைன் மூலம் ரசீது வாங்கும்போது முடியுடனும், முடி காணிக்கை செலுத்திய பிறகும் புகைப்படம் எடுக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி முடி காணிக்கை செலுத்துவதற்கு முன்பும், செலுத்திய பிறகும் புகைப்படம் எடுக்கும் முறை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று நடைமுறைக்கு வந்தது. இதனால் பெண் பக்தர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். சில சமயங்களில் ஆன்லைனில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் புகைப்படம் எடுக்க முடியாமல் முடி காணிக்கை செலுத்த பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கு பழைய முறைப்படி ரசீது வழங்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.