சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்


சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

சிவராத்திரி விழா

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை முதலே பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். அவர்கள் விடிய விடிய நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ். ரோட்டில் உள்ள பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் அலங்கார பூஜைகளும், படி விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தேவரடிபாளையத்தில் 85 அடி உயர மூங்கிலை வெட்டி, கோவை-பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு பக்தர்கள் சுமந்து வந்தனர். பின்னர் கோவில் முன்பு மூங்கில் நடப்பட்டது.

ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி

இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அய்யாசாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அய்யாசாமி ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஆற்றில் இருந்து சக்தி கரகத்துடன் அய்யாசாமி கோவிலை வந்தடைந்தார். நாளை(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு அய்யாசாமிக்கு மகா அபிஷேக, அலங்கார பூஜையுடன் சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.

சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகி கோவிலில் காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கிய சிவராத்திரி விழாவையொட்டி இரவு 12.30 மணிக்கு முதல் கால பூஜையும், 1.30 மணிக்கு 2-வது கால பூஜையும், 3.30 மணிக்கு 3-வது கால பூஜை நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சிவலோகநாதருக்கு பால், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம் இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

இதேபோன்று வடக்கு நல்லிகவுண்டன் பாளையம் நல்லீஸ்வரர் கோவில், அரசம்பாளையம் அருகே மல்லீஸ்வரர் கோவில், எஸ்.எம்.பி. நகர் அன்னபூரணி தாயார் உடனமர் திருசோற்றுத்துறை நாதர் கோவில் ஆகிய கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story