சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்


மகா சிவராத்திரியையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

விருதுநகர்

திருச்சுழி

மகா சிவராத்திரியையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

மகா சிவராத்திரி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள சிவாலயங்களில் இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், பன்னீர், நெய் மற்றும் 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் திருமேனிநாத கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகளில் விடிய விடிய கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்தனர்.

இதேபோல் திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நான்கு கால பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிதனம் செய்தனர். இக்குலதெய்வவழிபாட்டில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குலதெய்வ வழிபாடு செய்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள சிவன்கோவிலில் மகா சிவராத்திரி, சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில் ஆகிய ேகாவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்தீஸ்வரருக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன்கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வைத்தியநாத சுவாமி கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு இரவு நான்கு கால பூஜை நடைபெற்றது, பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். குலதெய்வ வழிபாடுகள் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில் சாமியாடி பாடல்கள் பாடி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு பத்திரகாளி அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிக வருகையையொட்டி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரதோஷம்

பிரதோஷம் என்றாலே சிவபெருமானை வணங்கக்கூடிய தினம் என்பது நமக்கு தெரியும். தோஷங்களை போக்க சிறந்த நாளாக இது கருதப்படுகிறது. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அதில் சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்கள் மகா சனிப்பிரதோஷமாக கருதப்படுகிறது. இந்த சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ நாட்கள் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நவகிரக தோஷங்கள் மற்றும்

பாவங்களை போக்கவல்லது. மேலும் சனியால் பாதிப்புக்குள்ளான மனிதர்களுக்கு இதுமிகவும் அற்புதமான நாளாக கருதப்படுகிறது. இந்நிலையில் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் சனி பிரதோஷம் உற்சவ விழா நடைபெற்றது. சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர், நெய் மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சுவாமியை நந்தி வாகனத்தில் வைத்து கோவிலைச் சுற்றி வந்த போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story