சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். அதிகாலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் வளாகப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் வனத்துறை கேட் திறக்கப்படாமல் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் வனத்துறையினர் நீர் ஓடைப் பகுதிகளில் நீர்வரத்து மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த காலை 7 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். மழை எதிரொலி காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.