நீப்பத்துறையில் குவிந்த பக்தர்கள்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணையாற்றில் உ்ளள நீப்பத்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.
செங்கம்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணையாற்றில் உள்ள நீப்பத்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.
சென்னியம்மன் கோவில்
செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அலமேலுமங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடரமண பெருமாள், சென்னியம்மன் கோவில் தேவஸ்தானம் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட சுற்றுவட்ட பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.
அதன்படி தென்பெண்ணையாற்றின் கரையோரம் அமைந்துள்ள அலமேலுமங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடரமண பெருமாள் மற்றும் தென்பெண்ணையாற்றின் நடுவே வீற்றிருக்கும் சென்னியம்மன் ஆளுடையான் பாறையில் தரிசனம் செய்ய இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சாமி தரிசனம்
வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நீப்பத்துறைக்கு நேற்று வந்து இரவு தங்கி மொட்டை அடித்து, பொங்கல் வைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னியம்மன் பாறையில் பக்தர்கள் மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகளை தூவி பக்தியுடன் தரிசனம் செய்தனர். அதேபோல புதிதாக திருமணமானவர்கள் தென்பெண்ணையாற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
அலமேலுமங்கை பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் தனித்தனி வாகனங்களில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் உலா நடைபெற்று வருகிறது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அலமேலுமங்கை பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடரமண பெருமாள் மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.






