பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

பழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். தங்கரதம் இழுத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல்

மாத கார்த்திகை

பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்திலும் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாலையிலே கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தங்கரதம் இழுத்து வழிபாடு

இதேபோல் கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து நடந்த தங்கரத புறப்பாட்டில் 173 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தேரை இழுத்து வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

செல்போனுக்கு தடை

பழனி முருகன் கோவிலில் மூலவரை படம் பிடிப்பதை தடுக்கும் வகையில் செல்போன் பயன்படுத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் படம் பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதேபோல் தங்கரத புறப்பாட்டின் போது சாமி தரிசனம் செய்வதை காட்டிலும், தங்கரதத்தை படம் பிடிப்பதிலேயே பக்தர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி, மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை பக்தர்களிடம் காட்டுகின்றனர். எனவே பழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story