பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். மேலும் மாதக்கார்த்திகை, வாரவிடுமுறை தினங்களில் சாதாரண நாட்களை விட இருமடங்கு பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக வாரவிடுமுறையில் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.


கடந்த 2 நாட்களாக பழனி பகுதியில் தொடர் மழை பெய்ததால் பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மழை தாக்கம் படிப்படியாக குறைந்தது. அதிகாலையில் சாரல் மழை மட்டும் இருந்தது. அதைத்தொடரந்து பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வந்தனர். எனவே கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டம் காரணமாக ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுமார் 1½ மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.



Next Story