பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் குவிந்தனர்
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். வார விடுமுறை, விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த வகையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்ததால் கடந்த 2 மாதங்களாக வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே நேற்று வாரவிடுமுறை மற்றும் கோடை விடுமுறை இறுதிநாளையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
தங்கரத புறப்பாடு
குறிப்பாக காலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் மற்றும் கோவிலின் தரிசன வழிகள் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.