தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்


தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்
x

தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர்

தொடர் விடுமுறை காரணமாக தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

தஞ்சை பெரியகோவில்

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டு இருக்கிறது. தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், நடராஜர், சண்டீகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி என பல்வேறு சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து சென்றனர். கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில்லை. ஆனால் பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் பலர் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தொடர் விடுமுறை

தொடர் விடுமுறையையொட்டி தஞ்சை பெரியகோவில் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நேற்று வந்திருந்தனர். இதனால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இவர்கள் கார்கள், வேன்கள், பஸ்களில் வந்ததால் பெரியகோவில் முன்புள்ள வாகன நிறுத்தம் இடம் நிரம்பியது.

வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பெரியகோவிலுக்கு சாலையை கடந்து மக்கள் சென்றதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிரம்பியதால் பழைய நீதிமன்ற சாலை, மேம்பாலம் இறக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பெரியகோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரியநந்தி உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர். மேலும் கோவிலின் கட்டிட கலைகளையும், சிற்பக்கலைகளையும் பார்த்து மெய்சிலிர்த்தனர். இன்று (திங்கட்கிழமை) சுதந்திரம் தினம் என்பதால் பாதுகாப்பு கருதி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்தர்கள் கொண்டு வரும் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு, பக்தர்கள் முழு சோதனைக்கு உட்படுத்திய பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்து இருந்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து சென்றனர்.

கலைக்கூடம்

பக்தர்கள் வருகை காரணமாக பெரியகோவில் சாலை, அண்ணாசாலை, காந்திஜிசாலையில் மாலைநேரத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவற்றை போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் சரி செய்தனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம், சரசுவதிமகால் நூலகம், அரண்மனை ஆகியவற்றை பார்ப்பதற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

கல்லணை

தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாத்தலமான கல்லணையில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆறுகளில் இறங்க அனுமதிக்கவில்லை. கல்லணையை சுற்றிபார்க்க வந்த மக்கள் கல்லணை பாலத்தின் மேலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர். கரிகாலன் பூங்கா, மணிமண்டபம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கல்லணை சிறுவர் பூங்காவில் அதிக அளவில் மக்கள் கூடி அங்கிருந்த விளையாட்டு சாதனங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட விட்டு ஆரவாரம் செய்தனர். கொள்ளிடம் ஆற்றில் கல்லணை மயானம் அருகே தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அங்கு இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.


Next Story