விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று மாலை அணிவிப்பு
மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சென்னை,
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் இன்று (வியாழக்கிழமை) முறையாக மாலை அணிவித்து விரதத்தை தொடங்குகின்றனர். சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன், குருவாயூரப்பன் கோவிலில் மாலை அணிவிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்காக காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 11 மணி வரை மாலை அணிவிக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் கோவிலிலேயே வாங்கி கொள்ளும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. கோவிலில் இருந்து 250 பேர் இருமுடி கட்டி சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு செல்கின்றனர். மாலை 6.45 மணி அளவில் கார்த்திக் ராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதேபோன்று சென்னையில் உள்ள கே.கே.நகர், அண்ணாநகர், ராஜாஅண்ணாமலைபுரம், மாதவரம் பால்பண்ணை அருகில் உள்ள அய்யப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிகின்றனர்.