பாபநாசம் சோதனை சாவடியில் வாகனங்களில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து பாதிப்பு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு பாபநாசம் சோதனை சாவடியில் வாகனங்களில் பக்தர்கள் குவிந்தனர். வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு பாபநாசம் சோதனை சாவடியில் வாகனங்களில் பக்தர்கள் குவிந்தனர். வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பக்தர்கள் குவிந்தனர்
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அகஸ்தியர் அருவி மற்றும் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பிரதான பகுதிகள் உள்ளன. இங்கு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோவிலை நோக்கி வருகை தந்த வண்ணம் இருந்தனர். மேலும் விடுமுறையை முன்னிட்டு அகஸ்தியர் அருவிக்கும் குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். அங்கு அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் பாபநாசம் கோவில் முன்பு படித்துறை பகுதியிலும் ஏராளமானோர் நின்று குளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையொட்டி நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. மேலும் இந்த வாகனங்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து பாபநாசம் கோவிலையும் தாண்டி சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.