மழை வேண்டி பனை ஓலையில் கஞ்சி சாப்பிட்டு பக்தர்கள் வழிபாடு
மழை வேண்டி பனை ஓலையில் கஞ்சி சாப்பிட்டு பக்தர்கள் வழிபாடு
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் பாரம்பரிய முறையில் கஞ்சி காய்ச்சி பனை ஓலையில் ஊற்றி ஆண்டு தோறும் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதன்படி நேற்று இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கஞ்சி பானைகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். கோவில் முன்பு பானைகளை படையல் வைத்து அவர்கள் வணங்கினர். பின்னர் சாதம், கூழ், வெங்காயம், தேங்காய் கலந்து தாங்கள் கொண்டுவந்த கஞ்சியினை பனை ஓலையில் ஊற்றி கிராம மக்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கஞ்சி சாப்பிடுவதற்கு இலை, தட்டு எதுவும் பயன்படுத்துவது இல்லை. மழை வேண்டி நடக்கும் இந்த வழிபாடு பல ஆண்டுகளாக தொடர்கிறது என்றனர்.