பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குன்னூர்,
குன்னூர் மேல்கடை வீதியில் தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து குண்டம் திருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக குன்னூர் நகராட்சி சார்பில், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி ஊழியர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நிகழ்ச்சியில் அபிஷேக பொருட்களுடன் அனைத்து ஊழியர்கள், தொழிலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேளதாளங்கள் முழங்கும் போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நடனமாடினர். பின்னர் நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் தந்தி மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.