மேல்மலையனூர் கோவிலுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் பக்தர்கள் அவதி
மேல்மலையனூர் கோவிலுக்கு செல்ல விழுப்புரத்தில் இருந்து போதிய பஸ்கள் இல்லாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் தேர் திருவிழாவை பக்தர்கள் காண வசதியாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் நேற்று காலை 6 மணி முதல் மாலை வரை அலைமோதியது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படாததால் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலமணி நேரம் கால்கடுக்க பஸ் நிலையத்திலேயே காத்திருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.
ஆபத்தான பயணம்
விழுப்புரத்தில் இருந்து மேல்மலையனூருக்கு ஒரு சில பஸ்களே இயக்கப்பட்ட நிலையில் அந்த பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறினர். இடம் கிடைக்காத பலர் கூட்டநெரிசலில் சிக்கித்தவித்தனர். சிலர், பஸ்சின் படிக்கட்டுகளில் அமர்ந்தும், தொங்கியபடியும் ஆபத்தான பயணம் மேற்கொண்டதை காண முடிந்தது. எனவே இதுபோன்ற திருவிழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.