பறவை காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


பறவை காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:45 PM GMT)

நந்தட்டி முருகன் கோவில் தேர்த்திருவிழாவைெயாட்டி பறவை காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

நீலகிரி

கூடலூர்

நந்தட்டி முருகன் கோவில் தேர்த்திருவிழாவைெயாட்டி பறவை காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

தேர்த்திருவிழா

கூடலூரை அடுத்த நந்தட்டி ஸ்ரீ அருள் முருகன் கோவிலின் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் காலை கணபதி ஹோமமும், கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து காப்புக்கட்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் பாண்டியாறு இரும்பு பாலம் ஆற்றங்கரையில் இருந்து பறவை காவடி, பன்னீர் காவடி, அக்னி சட்டி, பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலமானது கோழிப்பாலம், பள்ளிப்பாடி, கொலமன்வயல் வழியாக நந்தட்டி முருகன் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திருக்கல்யாணம்

இதையடுத்து தினமும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது இன்று(ஞாயிற்றுக்கிழமை) வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேள-தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருத்தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.ஆர். நகர், பள்ளிபடி, செம்பாலா உள்பட முக்கிய இடங்களுக்கு சென்று மறுநாள் அதிகாலையில் கோவிலை வந்தடைகிறது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


Next Story