ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு


ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
x

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

ஈரோடு

கொடுமுடி

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

புனிதநீராடி வழிபாடு

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு நேற்று நடந்த ஆடிப்பெருக்கு விழாவுக்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடுமுடி கோவிலுக்கு வந்திருந்தனர்.

பின்னர் காவிரியில் புனித நீராடி அங்குள்ள அரச மரத்தடி விநாயகருக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். அதன்பின்னர் மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி, பிரம்மா, ஆஞ்சநேயர், மகாலட்சுமி, வீரநாராயண பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் காவிரியில் முளைப்பாரி விட்டு வழிபட்டனர்.

புதுமண தம்பதிகள்

மேலும் புதுமண தம்பதிகள் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்திருந்து திருமாங்கல்யம் பிரித்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல் தீயணைப்புத் துறையினரும் காவிரிக்கரையில் ரோந்து சென்றனர்.

கொடுமுடி பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் காவிரிக்கரைகளையொட்டிய பகுதிகளில் தூய்மை பணி செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து சன்னதியிலும் சென்று வழிபட ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, ஊமாரெட்டியூர் பிரிவு, அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, கோனேரிபட்டி பிரிவு, குதிரைக்கல்மேடு, மாணிக்கம்பாளையம், சித்தார் கேசரிமங்களம், குட்டமுனியப்பன் கோவில் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகாலை முதலே காவிரி ஆற்றில் குவியத் தொடங்கினர்.

மேலும் கூட்டம் கூட்டமாக மேளதாளத்துடன் தங்கள் குலதெய்வங்களுடன் ஆற்றில் வந்து புனித நீராடி தீர்த்தம் எடுத்து சென்றனர். சிலர் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வந்து படையலிட்டு வழிபட்டனர். குழந்தைகள் முதல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காவிரியில் புனித நீராடினர். அதனால் காலை முதல் காவிரி ஆற்றில் கூட்டம் களைகட்டியது.

புதுமணத்தம்பதியினர் தங்களது தாலியை பிரித்து கட்டும் நிகழ்வும் நடைபெற்றன. முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபட்டனர். தங்களது குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனால் குலதெய்வ கோவில்களில் கூட்டம் அலைமோதியது.


Next Story