சுருளி அருவியில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
சுருளி அருவி
ஆடி அமாவாசை தினம் முன்னோர்களை வழிபட கூடிய நாளாகும். இந்த நாளில் லோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்குவதற்கு பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாக சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. இது ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக உள்ள புண்ணிய தலமாகவும் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் சுருளி அருவிக்கு வந்து நீராடி செல்கின்றனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நேற்று ஆடி 2-வது அமாவாசையையொட்டி சுருளி அருவியில் நீராடுவதற்கு அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் புனித நீராடி விட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்கு உள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
சுருளி அருவி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. இதனால் நேற்று அருவி பகுதியில் கம்பம் கிழக்கு வன அலுவலர் பிச்சைமணி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முல்லைப்பெரியாறு
இதேபோல் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் பக்தர்கள் குளித்து விட்டு, கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலில் சிவன் மற்றும் விநாயகருக்கு மோட்ச விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பெரியகுளம் தென்கரை பகுதியில் வராகநதி கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் இருகரைகளிலும் எதிர் எதிரே ஆண், பெண் மருத மரங்கள் உள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி பெரியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் வராகநதி கரையில் அமர்ந்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதில் தேன், பால், பச்சரிசி, வாழைப்பழம், எள் போன்ற பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் பிண்டத்தை வராகநதி ஆற்றில் கரைத்தனர்.