பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்திரை திருவிழா
கம்பத்தில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. இதையொட்டி இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.
விழாவில் கம்பம் பார்க்ரோடு, நகராட்சி ரோடு, நெல்லு குத்தி புளியமரதெரு, நாட்டுக்கல், கஞ்சையன்குளம் நந்தனார் காலனி, ஆங்கூர்பாளையம் ரோடு, மணிநகரம், சுருளிப்பட்டி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் மா, வேப்பிலை தோரணங்கள், அலங்கார மின்விளக்குகள் அமைத்து இருந்தனர். இதனால் கம்பம் நகர் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
அக்னிசட்டி ஊர்வலம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னி சட்டி ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பால்குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல், ஆயிரம் கண் பானைகள் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். பின்னர் இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவையொட்டி கவுமாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையினர் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். கம்பம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதியை அதிகாரிகள் செய்திருந்தனர்.