கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடி முதல் அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
கன்னியாகுமரி:
ஆடி முதல் அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
ஆடி முதல் அமாவாசை
இந்துக்களின் முக்கியமான விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து கடல், ஆறு போன்ற புனித தீர்த்தங்களில் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத அமாவாசை 2 முறை வருகிறது.
அதன்படி முதல் அமாவாசை நேற்று வந்தது. அடுத்த அமாவாசை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வருகிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
முதல் அமாவாசையையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரண்டனர். அங்கு கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் 16 கால் மண்டபம் பகுதியில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் மற்றும் வேதம் ஓதுபவர்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர்.
அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் ஆகியவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத 2-வது அமாவாசை பூஜையைத் தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடைபிடிக்க உள்ளனர். இதனால் அடுத்த மாதம் 16-ந் தேதி அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த முதல் அமாவாசையன்று எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாமல் குறைந்த அளவே பக்தர்கள் புனித நீராடியதை காண முடிந்தது.