பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காந்திநகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

காந்திநகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முத்துமாரியம்மன் கோவில்

கூடலூர் அருகே காந்திநகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 11 மணிக்கு முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 30-ந் தேதி காலை 6 மணி முதல் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இரவு 8 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷே, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சின்ன சூண்டி ஆற்றங்கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக வந்தனர். பால்குடங்கள், பறவை காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுவாமி வீதி உலா

பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்று அதிகாலையில் தேர் கோவிலை வந்தடைந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விசேஷ பூஜைகளும், 11 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. பின்னர் உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


Next Story