பேரூர் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர்


தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

கோயம்புத்தூர்

பேரூர்


ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.


ஆடிப்பெருக்கு


புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பேரூர் படித்துறை யில் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


அங்கு நேற்று காலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றது. ஆனாலும் பக்தர்கள் பலர், தங்களின் குடும்பத்தில் உயிரிழந்த குழந்தைகள், திருமணம் ஆகாமல் இறந்த பெண்கள் ஆகியோருக்கு இலையில் படையல் வைத்து வழிபாடு செய்தனர்.


தாலிக்கயிறு மாற்றினர்


சிலர் ஆற்றங்கரையோரம் 7 கூழாங்கற்களை கொண்டு கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து காதோலை, கடுகுமணி, தாழைமடல், நாணல் இலை மற்றும் தின்பண்டங்கள் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கோசாலையில் இருக்கும் கன்றுக்குட்டிகளுக்கு அகத்திக்கீரை வழங்கினார்கள்.


அதைத்தொடர்ந்து நொய்யல் ஆற்றங்கரை மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.


இதற்கிடையே புதிதாக திருமணமான இளம்பெண்கள் தாலிக்கயிறை மாற்றிக்கொண்டனர். அத்துடன் பலர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நொய்யல் ஆற்றில் காலை முதலே பக்தர்கள் குவிந்ததால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இது குறித்து படித்துறையில் குவிந்த பக்தர்கள் கூறியதாவது:-


தோஷம் நீங்கும்


ஆடிப்பெருக்கு என்றாலே நொய்யலில் உள்ள படித்துறையில் 18 படிகளையும் மூழ்கடித்தபடி தண்ணீர் செல்லும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மிகக்குறைவான அளவே தண்ணீர் சென்றது. ஆனாலும் பக்தர்கள் கரையில் நின்றபடி படையல் வைத்து வழிபட்டனர்.


பின்னர் அவர்கள் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர். பேரூர் புண்ணிய பூமி என்பதால் நொய்யல் படித்துறையில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் திருமணமாகாத இளம்பெண்களுக்கு படையல் வைத்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story