காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x

பங்குனி உத்திரத்தையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பங்குனி உத்திரத்தையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரம்

நெல்லை மாவட்டம் அம்பை-பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன், கசமாடன், பட்டவராயன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு கார்கள், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்கள், வேன்கள் மூலம் வந்து குவிந்தனர்.

புனித நீராடினர்

தொடர்ந்து சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியும், பொங்கலிட்டும், கிடா வெட்டியும் சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் சொரிமுத்து அய்யனார் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்து கோவிலுக்கு சென்றன.


Next Story